அருட்தந்தை கலாநிதி நீக்கிலாபிள்ளை மரிய சவேரி (மரிய சேவியர்) அடிகளார் 03.12.1939 இல் யாழ்ப்பாணம் இளவாலையில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் கற்றார். 12 வயதில் சிறிய குருமடத்தில் சேர்க்கப்பட்ட இவர் பாடசாலையில் கற்கும் காலத்தில் அதீத திறமையால் இரட்டை வகுப்பேற்றங்களை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டார். கண்டி அம்பிற்றிய தேசிய செமினறியில் இறையியல் கல்வியைப் பெற்றுத் தொடர்ந்து ரோமாபுரியில் இறையியல் கல்வியைப் பெற்றார். தனது 22 ஆவது வயதில் 1962 இல் ரோமில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
உலகில் மிகக் குறைந்த வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டவர்கள் வரிசையில் இவர் மூத்தவராகக் கணிக்கப்படுகின்றார். இளவயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்படுவதற்கு அன்றைய காலத்தில் இவருக்கு புனித பாப்பரசர் விசேட அனுமதியை வழங்கியிருந்தாராம். 1962 இன் பிற்பகுதியில் சில காலங்கள் புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியராகவும் பகுதித் தலைவராகவும் பணியாற்றினார். ஆயினும் இவரது ஆர்வம் கலைத்துறைமீதே அதிகளவாக இருந்தது. இதனால் பாவசங்கீர்த்தன இரகசியம் என்ற இத்தாலியத் திரைப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பை ஏற்று அதனைச் சிறப்பாக செயற்படுத்தினார்.
இந்தியாவில் கற்கும் போது திராவிடர் கழக உரைகளாலும் நாடகம் சார்ந்த செல்வாக்குகளாலும் கவரப்பெற்ற அருட்தந்தை அவர்களின் தனது இளமைக்காலத்தில் எதுகை மோனையுடன் கூடிய அடுக்குவசன நடையில் தானும் உரையாற்றி மக்கள் மனங்களை வென்றார். தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் உதவிக் குருவாகப் பொறுப்பேற்று நாடகம் சார்ந்த முயற்சிகளில் ஈடுபட்டார். மதங்கடந்து இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு பாஸ் என்று அழைக்கப்படுகின்ற திருப்பாடுகளின் காட்சிகளை தமிழில் புதிதாக எழுதி அரங்கேற்றினார். திருப்பாடுகளின் காட்சியை முதன்முதலாகத் தமிழில் நாடக வடிவில் ஆக்கியவர் அடிகளாரே ஆவார். 1966 இல் உரும்பிராய் பங்குத் தந்தையாக நியமனம் பெற்றார். பின் குருநகரிலும் பங்குத் தந்தையாகப் பணியாற்றினார். 1966 இல் உரும்பிராயில் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய வேளை சமூக சமய நல்லிணக்கத்திற்கான ஊடகமாகக் கலையைக் கையாளலாம் என்று முயன்றார். இதற்காக நாடக வடிவத்தைக் கையில் எடுத்தார். அதில் வெற்றியும் கண்டார். அருட்தந்தையர்கள் நாடக வடிவத்தைக் கையாளக் கூடாது என்ற பாரம்பரிய நம்பிக்கையைத் தகர்த்து நாடக வடிவின் ஊடாக இறைநம்பிக்கையை ஊட்டும் கலைப்பயணத்தை மேற்கொண்டார்.
பன்மொழியாளுமையும் நாடக இரசிப்பும் உருவாக்கமும் வெவ்வேறு கலைப்பயணங்கள் வெவ்வேறு கல்விக் களங்கள் என்பவற்றின் வாயிலாக ஜேர்மன், ஆங்கிலம், சிங்களம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் முதலிய மொழிகளில் ஆளுமை பெற்றார். இவரளவுக்கு நாடகத்தைப் பார்வையிட்ட ஒர் இரசிகர் இலங்கையில் இருப்பாரா? என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு நாடகம் இவரை ஆட்கொண்டிருந்தது. இத்தனைக்கும் நாடகம் சார்ந்த பட்டப்படிப்பு எதனையும் மேற்கொள்ளாத அடிகளார் நாடகத்துறை மேதையாகத் திகழ்வது அவரது அதீத ஆர்வத்தின் வெளிப்பாடே ஆகும். திருமறைக்கலாமன்ற உருவாக்கம் கலைத்தூது என்ற நிலையில் கலைப்பயணம் மேற்கொள்ளும் நோக்குடன் 1965 இல் உரும்பிராயில் உதயமானதே திருமறைக் கலாமன்றம்.
இன்று இலங்கையில் 20 கிளைகளைப் பரப்பி கலைத்தூது மேற்கொள்ளும் மிகப்பெரும் நிறுவனமாகத் திகழ்கின்றது. திருமறைக் கலாமன்றத்தின் ஊடாக இதுவரை 88 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கலைமுகம் என்ற காலாண்டு சஞ்சிகை (இதுவரை 64 இதழ்கள்) அடிகளாரைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்படுகின்றது. இதைவிட ஆற்றுகை என்ற நாடகமும் அரங்கியலுக்கான சஞ்சிகை, Journal of Saiva Sidhanta Studies (14 இதழ்கள்) என்ற ஆங்கில சஞ்சிகை என்பன அடிகளாரின் பங்கேற்புடன் வெளியிடப்பட்டன. திருமறைக்கலாமன்றத்தின் கிளைகள் கனடா, பிரான்ஸ், சுவிஸ்லாந்து லண்டன் நோர்வே முதலிய நாடுகளிலும் பரந்துள்ளன. கலைத்தூது அழகியற் கல்லூரி, கலாமுற்றம் என்ற ஓவியக் கலைக்கூடம் என்பன நிறுவப்பட்டிருக்கின்றன. நம்மண்ணில் அடையாளப்படுத்தப்படக் கூடிய கலைத்துவமுள்ள கலைஞர்கள் பலர் அடிகளாரால் உருவாக்கப்பட்டு இன்று உலகெங்கும் பிரகாசிக்கின்றனர். தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைந்து பட்டப்படிப்பை வழங்கும் நிறுவனமாகவும் மன்றம் திகழ்கின்றது. திருமறைக்கலாமன்றம் இன்றுவரை 18 நடன அரங்கேற்றங்களையும் 03 மிருதங்க அரங்கேற்றங்களையும் மேற்கொள்வதற்கு அன்று அடிகளார் இட்ட அடித்தளமே காரணமாகும்.
அடிகளாரின் கலைத்தளம் 1971 இல் யாழ்ப்பாணம் கோட்டையைத் தளமாகக் கொண்டு முன்னூறு கலைஞர்களின் பங்கேற்புடன் அன்பில் மலர்ந்த அமர காவியம் என்ற நாடகத்தை அடிகளார் மேடையேற்றினார். 1972 இல் இங்கிருந்து 22 பேரடங்கிய நாடகக் குழுவை தமிழ்நாட்டின் திருச்சி நகருக்கு விமானத்தி;ல் அழைத்துச் சென்று நாடகம் ஒன்றை மேடையேற்றினார். 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சர்வதேச சிறுவர் மாநாடு இடம்பெற்ற போது யுத்தத்தின் தொட்டில் (In the credle of War) என்ற பெயரில் ஊம நாடகம் (Wordless play) ஒன்றை மேடையேற்றி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றார். எங்கள் மண்ணில் வார்த்தைகள் அற்ற நாடக வடிவத்தின் ஆரம்ப கர்த்தாவாக அடிகளாரையே கொள்வர். இதைவிட திருப்பாடுகளின் காட்சிகளுக்கு இடையே தமிழ்ச் சிற்றிலக்கிய வடிவங்களைப் புகுத்தியும் இக்கால செய்திகளைக் குறியீடாக்கியும் நாடகம் வரையும் நுட்பத்தையும் வெற்றிகரமாகக் கையாண்டார். சிலுவை உலா, கல்வாரிப்பரணி, கல்வாரிக் கலம்பகம் முதலிய சிற்றிலக்கிய வடிவங்களை நாடகங்களில் கையாண்டார். 1971 இல் முதன் முதலாக பல சவால்களுக்கு மத்தியில் அருளும் இருளும் என்ற பெயரில் நாட்டிய நாடகத்தை மேடையேற்றினார். தமிழர் பண்டிகையாகத் தைப்பொங்கலைக் கொண்டாடும் வழக்கத்தை 1960களில் அடிகளார் மேற்கொண்டார்.
இன்று இது சமயம் கடந்த நிலையில் பேணப்படும் பண்டிகையாகக் காணப்படுகின்றமைக்கு அடிகளார் இட்ட அடித்தளமே காரணமாகும். ஜேர்மன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் பெற்ற புலமையாலும் அந்த நாடகங்களை பார்த்த பட்டறிவினாலும் தமிழுக்குப் புதிய அரங்க வடிவங்களை அறிமுகம் செய்தார். நிறைவாக… வரலாற்றுத் துறையிலும் (லண்டன்) சைவசித்தாந்தத் துறையிலும் ஜேர்மனி) கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். இதைவிட 2010 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சி 2019 ஆம் ஆண்டு அடிகளாருக்கு சாதனைத் தமிழன் விருதை வழங்கிக் கௌரவித்தது. இதைவிடப் பல சமூக மற்றும் சமய அமைப்புகள் அடிகளாருக்கு விருதுகளையும் கௌரவங்களையும் வழங்கியுள்ளன. கொழும்புத்துறை பெரிய குருமடத்தில் சைவசித்தாந்த மெய்யியலுக்கான பேராசிரியராகவும் செயற்பட்டார். சைவ சித்தாந்தத்தை தமிழர் சித்தாந்தமாகக் கொண்டு ஆராய்ச்சித் தளத்தில் முன்னெடுக்கும் அறிஞராக உலகோர் அடிகளாரை அடையாளப்படுத்துவர். சிங்களக் கலைஞர்களையும் தமிழ்க்கலைஞர்களையும் சேர்த்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் நாடக வடிவத்தைக் கையாண்டு இவர் மேற்கொண்ட முயற்சிகள் சமாதான விரும்பிகளிடையே மிகப்பெரும் செயற்பாடாக நோக்கப்படுகின்றது. இதனைக் கௌரவிக்கும் முகமாக 2016 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான மீயுயர் விருது ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. வாழ்வில் சாதனைப் பயணத்தை மேற்கொண்ட அடிகளாரின் வாழ்வியல் நம் எல்லோருக்கும் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கதாகும்.
– நன்றி மெய்வெளி